தக்காளிக்கு உரிய ஆதார விலை கிடைக்கவில்லை - பழனி விவசாயிகள் கவலை
பழனி பகுதியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி போன்ற பயிருக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பறிக்கப்படும் தக்காளி களை பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறிசந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் தக்காளி விலை மிகவும் குறைந்து விற்பனை செய்யப்படுவதால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது, "பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி அதிகளவில் பயிரிட்டுள்ளோம். தற்போது 12 கிலோ எடைகொண்ட பெட்டி ஒன்று 30ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியை பறித்து வாடகை ஆட்டோவில் மார்க்கெட் கொண்டு செல்லும் செலவை விட மிகவும் குறைவாக விற்பனை செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். எனவே தக்காளி போன்ற பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் சொந்த தொகுதியில் தக்காளியை பதப்படுத்தி தக்காளிசாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தக்காளி விலை கடும் வீழ்ச்சியால் தக்காளியை படிக்காமல் செடியிலேயே காயும் நிலையால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.