மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்...
மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாய சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராடி வருகின்றனர்.
பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் துரைராஜ் தலைமையில், விவசாய சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
அப்போது அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினார்.