தேர்வில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து விவசாயி மகன் சாதனை
தேர்வில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்தள்ளதையடுத்து ஒரு விவசாயி மகனுக்கு 14 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுக்கா குனூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் பிரசாந்த். இவர் மைசூரில் உள்ள உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்.சி தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார்.
அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் பிரசாந்த். இதைப் பாராட்டி பிரசாந்த்துக்கு பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரசாந்தின் இந்த சாதனையை அவரது ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமம் மட்டுமல்லாமல், மாவட்டமே கொண்டாடி வருகிறது.

இது குறித்து பிரசாந்த் பேசுகையில், ‘என் குடும்பம் விவசாயக் குடும்பம். நானும் விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். விவசாயத்தில் பலரும் ஒரே பயிரை சாகுபடி செய்து சிக்கல்களை சந்திக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாயி விஞ்ஞானியாக மாற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
அதற்காகத்தான் இந்த படிப்பை நான் தேர்வு செய்தேன். என் லட்சியத்தை விரைவில் அடைவேன். என் படிப்புக்காக பெற்றோர் வாங்கிய கடனை நான் அடைப்பேன்’ என்று பேசினார்.