விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், போராட்டம் தொடர்கிறது. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதனால் போராட்டத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, விவசாயிகள் நாளை(பிப்.,6) சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியில் போலீசார், தேவையான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், வதந்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீசார் கூறுகையில், போராட்டம் நடத்தும் விவசாயிகள், நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
குடியரசு தினத்தன்று நடந்த பேரணி வன்முறையில் முடிந்ததை கருத்தில் கொண்டு, டெல்லி எல்லையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக விரோதிகள் டெல்லிக்குள் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. போலீசுக்கு எதிராகவும், மற்ற விஷயங்கள் தொடர்பாகவும் பொய்யான தகவல் பரவுவதை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், மற்ற மாநில போலீசாருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: நாடு முழுவதும் நாளை நடக்கும் போராட்டம் அமைதியாக நடக்கும். டில்லியில் போராட்டம் நடக்காது. டில்லிக்கு வெளியே 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என்றார்.