உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு - அரசு அறிவிப்பு
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வன்முறைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன்தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரின்மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. உ.பி. வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 45 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த வன்முறை குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மூலமாக விசாரணை நடத்தப்படும் என்றும், அடுத்த 8 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஜெனரல் பிரஷாந்த் குமார் தெரிவித்தார்.