விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி
விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்தவகையில் இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ''குடியரசு நாளன்று ஏற்பட்ட கலவரம் நாட்டையே அவமதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
மூவர்ணக் கொடி அவமதிப்பு செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. வன்முறை எப்போதும் பிரச்னைகளுக்கு தீர்வாகாது. 2021-ம் ஆண்டை சிறப்பான ஆண்டாக உருவாக்க மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. பிற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவாக அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறித்து மக்களுக்கு அரசு சார்பிலும், தொண்டு அமைப்புகள் சார்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனவரி மாதம் மிகச்சிறந்த மாதமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண்மைத்துறையை நவீனப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வேளாண்மையை நவீனமாக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது'' என்று கூறினார்.