மாடுகள் இல்லாததால் மகனின் உதவியுடன் பரம்படித்த விவசாயி: நெஞ்சை உருக்கும் புகைப்படம்
மதுரையில் உழவுப் பணிக்கு மாடுகள் இல்லாததால் மகனின் உதவியுடன் விவசாயி ஒருவர் பரம்படிக்கும் புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளன. மதுரையின் விக்கிரமங்கலத்தை அடுத்த முதலைக்குளம் பகுதியில் கண்மாய் பாசனம் மூலம் உழவுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது கண்மாயில் பாதியளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த கட்ட நடவுப்பணிகள் தொடங்கியுள்ளன, நடவுக்கு முன்னர் பரம்படித்தல் எனும் வயலை சமன்படுத்த மாடுகளே பயன்படுத்தப்படும். இந்த ஊரில் இப்பணிக்கு ஒரு ஜோடி மாடுகள் மட்டுமே உள்ளது, அனைத்து வயல்களுக்கும் அந்த மாடுகள் செல்ல இயலாத நிலையில் பல வயல்களில் வேலைகள் தாமதமாகியுள்ளன.
இதனால் தன்னுடைய மகனின் உதவியுடன் பரம்படிக்க முடிவு செய்தார் பாண்டி என்ற பட்டதாரி விவசாயி, 13 வயதான கவியரசு என்பவரின் உதவியுடன் பரம்படித்தார். இதுகுறித்து பாண்டி கூறுகையில், பட்டதாரி ஆனாலும் பரம்பரை தொழிலான விவசாயத்தை செய்து வருவதாகவும், தனது மகனுக்கும் சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் ஆர்வம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.