கெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு...விவசாயி தற்கொலை - சடலத்துடன் போராடும் மக்கள்
தருமபுரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் கணேசன் விவசாயியாக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் மற்றும் கிணறு உள்ளது. இதனிடையே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக இவரது நிலத்தில் அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் கடந்த 2 தினங்களாக வந்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று பாலவாடி அருகே ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர்.விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட கணேசன் போராட்டம் நடத்த இடத்திலிருந்து தனது நிலத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டு சடலத்துடன் பாலவாடி அருகே சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கெயில் விவகாரப் பிரச்னையில் விரைவில் ஒரு முடிவு ஏற்பட தமிழக அரசு வழி வகுத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.