விவசாயிகளுக்காக நாம் ஒன்றுபட வேண்டும் - அனைத்து கட்சிகளுக்கும் அமரிந்தர் சிங் அழைப்பு
விவசாயிகளின் பலத்தையும் ஒற்றுமையையும் காட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பிப்ரவரி 2 ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், டெல்லி எல்லையில் போராட்டக் களத்தில் போலீசாராலும், குண்டர்களாலும் விவசாயிகள் தாக்கப்பட்டனர். இப்போது நாம் ஒன்று கூடி நமது பலத்தை காட்ட வேண்டும். இது ஈகோ பார்ப்பதற்கான நேரம் கிடையாது.
நமது மாநிலத்தையும், மக்களையும் காக்க நாம் ஒன்றுபட வேண்டிய நேரம். விவசாயிகள் மீது டில்லி, சிங்கு எல்லை ஆகியவற்றில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும். அதனால் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்று, நமது ஒற்றுமையை காட்ட வேண்டும்.
விவசாயிகள் ஒவ்வொருவர் மீது விழும் அடியும், ஒவ்வொரு பஞ்சாபியையும் தொடுவதற்கு சமம். பஞ்சாப் நலனிற்காக விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டால் தான் நமது விவசாயிகளை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும்.
அனைவரும் ஒன்று கூடி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுள்ளார். பிப்ரவரி 2-ம் தேதி காலை 11 மணிக்கு பஞ்சாப் பவனில் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.