ஸ்டம்பிங் தவற காரணம் இதுதான் - ரிஷப் பந்த் விளக்கத்தை ஏற்க மறுக்கும் ரசிகர்கள்
லக்னோ அணியின் தோல்விக்கு ரிஷப் பந்த்தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
LSG vs DC
ஐபிஎல் தொடரின் 4வது போட்டியாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 15 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து, ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய அணித்தலைவர் ரிஷப் பந்த், 6 பந்துகளை எதிர்கொண்டும், ஓட்டங்கள் எடுக்காமல் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்டம்பிங்கை தவற விட்ட ரிஷப் பந்த்
210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 2 ஓவர் முடிவில் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்ததாக வந்த அக்சர் படேல் 22 ஓட்டங்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
12.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் லக்னோ அணியே வெற்றி பெரும் சூழல் நிலவியது.
ஆனால், அடுத்தாக வந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து டெல்லி அணியை கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார்.
ஆனால், கடைசியாக மோஹித் சர்மா ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பு கொடுத்தார். அதை தவறவிட்ட ரிஷப் பந்த், LBW முறையீடு செய்வதிலே குறியாக இருந்தார்.
— Viru B (@ViruB1023220) March 25, 2025
அப்பொழுது மோஹித் சர்மா ஒரு ஓட்டம் எடுக்க முயற்சிப்பார். அப்போது பீல்டர் வீசிய பந்தை வாங்கி ரிஷப் பந்த், ரன் அவுட் செய்திருந்தால் லக்னோ அணி வெற்றி பெற்றிருக்கும்.
ரிஷப் பந்த் விளக்கம்
போட்டிக்கு பின்னர் பேசிய அவர், "மோஹித் சர்மாவின் பேடில் பந்து படாமல் இருந்திருந்தால், ஸ்டம்பிங் செய்திருப்பேன்" என தெரிவித்துள்ளார்.
ஆனால் ரிஷப் பந்தின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் ரசிகர்கள், 6 பந்துகள் எதிர்கொண்டு டக் அவுட் ஆனது குறித்தும், ஒரே பந்தில் வெற்றிக்கு கிடைத்த இரு வாய்ப்புகளையும் தவற விட்டது குறித்தும் விமர்சித்து வருகிறார்கள்.
2016 முதல் 2024 வரை டெல்லி அணிக்காக ஆடிய ரிஷப் பந்தை, இந்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி 27 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பந்த் உள்ளார்.