500 பேரை கொல்வேன்- மிரட்டல் ஆடியோ வெளியிட்ட ரவுடி கைது
டேங்கர் லாரியை வெடிக்க செய்து 500 பேரை கொல்வேன் என மிரட்டல் ஆடியோ வெளியிட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள பங்களாசுரண்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கோழி அருள் மீது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சென்னையிலும் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கண்ணன் என்ற கான்டிராக்டர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோழி அருள் பரபரப்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்ததுடன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.
எனக்கு ஒரே போர்ஸ்தான். அதற்கான ஆயுதம் கேஸ் டேங்கர் லாரி. எங்கே எதை கொளுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். டேங்கர் லாரியோடு 500 பேரை கொன்றுவிட்டுதான் சாவேன்’’ என்று கூறியுள்ளார்.இதையடுத்து கோழி அருளை பிடிக்க நெல்லையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கோழி அருள் அம்பத்தூர் எஸ்டேட் அத்திப்பட்டில் தனது சித்தப்பா மகன் தினகரன் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார், கோழி அருளை சுற்றி வளைத்தனர்.
அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் ராஜூ பிரின்ஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் துப்பாக்கி முனையில் கோழி அருளை கைது செய்தனர்.