தஞ்சையில் பிறந்து தமிழகத்தில் பேச்சில் மிஞ்சிய பிரபலங்கள் குறித்து தெரியுமா?
தென்னிந்தியாவில் மிக முக்கியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உ.வே.சாமிநாதையர்
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்தாத்தா” என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இவர் பிப்ரவரி 19, 1855ம் ஆண்டு வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.
மேலும், தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர். உ.வே.சா. அவர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாசித்து தாளில் எழுதி அச்சிட்டு புத்தகமாக வழங்கினார். உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப் சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளன
ர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புராணங்கள், உலா, கோவை, தூது, வெண்பா நூல்கள், அந்தாதி, பரணி, இரட்டை மணிமாலை ஆகிய நூல்களை உ.வே.சா புதுப்பித்து வழங்கியுள்ளார். . உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடு தேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். இவர் ஏப்ரல் 28, 1942 அன்று மறைந்தார். இந்திய அரசு, பிப்ரவரி 18, 2006 அன்று இவருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
ஜி.கே. மூப்பனார்
இவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் காங்கிரசு தலைவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக ஆகஸ்ட் 19, 1931 ம் ஆண்டு பிறந்தவர்.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.
திவ்யதர்ஷினி
இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவார். 17 பிப்ரவரி 1985ம் ஆண்டு அன்று பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்ட இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னதிரைக்கு அறிமுகமானவர் திவ்யதர்ஷினி .
அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் விகடன் வழங்கியது.
எச்.ராஜா
எச்.ராஜா பிறந்தது தஞ்சாவூர் அருகே அமைந்திருக்கும் மெலட்டூர் எனும் சிறிய கிராமத்தில். இவர் இந்திய அரசியல்வாதி ஆவார். எச் ராஜாவின் முழுப்பெயர் ஹரிஹர ராஜா ஷர்மா என்பதாகும். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வணிகம் (காமர்ஸ்) பட்டப்படிப்பு படித்து முடித்தவர் அரசியலில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு முன்னர் பட்டயக் கணக்கீடு எனப்படும் சார்ட்டட் அக்கவுண்டன் வேலை செய்து வந்தார்.
இதுவரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக 5 முறை தேர்தலில் நின்றிருக்கிறார். இதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 2 முறை மற்றும் லோக் சபா தேர்தலில் 2 முறை ஆகும். இதில் 2001ல் காரைக்குடி தொகுதியில் நின்று ஒரே ஒருமுறை மட்டுமே இவர் வெற்றிக் கண்டிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு ராஜா பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது இந்திய இரயில்வே துறையில், பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு தலைவராகப் பதவி வகிக்கின்றார்.
ஹேம மாலினி
ஹேம மாலினி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் திரைப்பட தயாரிப்பாளரான வி எஸ் ஆர் சக்ரவர்த்தி மற்றும் ஜெயா லட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகளாக பிறந்துள்ளார். தமிழ் திரைத்துறையில் தன் திரைப்பயணத்தை தொடங்கி ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
படிப்பில் அதிக ஆர்வம் கொண்டு சென்னையில் கல்வி பயின்றுள்ள இவர், தனது 11-ஆம் வகுப்பில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். 1961ல் இது சத்தியம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றி தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டு தர்மேந்திரா திரைப்படத்தில் நடித்து ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமானார். ஹிந்தி திரைப்படங்களில் இயக்குநர், நடிகை, எழுத்தாளர், தயாரிப்பாளர் என பான் முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், 1999-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் 2004-ஆம் ஆண்டு அந்த கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
ஷங்கர் சண்முகம்
இந்திய திரையுலகின் பிரம்மாண்டஇயக்குனர் என்று அறியப்படுபவர் ஷங்கர். இவர் 17 ஆகஸ்ட் 1963ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முத்துலட்சுமி மற்றும் சண்முகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் . திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு டைப்ரைட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் நாடக மேடை நிகழ்ச்சிகளை தற்செயலாகப் பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகரால் திரைக்கதை எழுத்தாளராக அவர் திரையுலகில் இணைக்கப்பட்டார் . நடிகராக ஆசைப்பட்டாலும், அதற்கு பதிலாக இயக்குநராகத் தேர்ந்தெடுத்து இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1993 இல், அவர் ஜென்டில்மேன் என படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதுவரை 15 படங்களை இயக்கியுள்ளார் ஷங்கர்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இவர் ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத்கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தார். இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்தார். அவரது தலைமையில் வேத விற்பன்னர்களை பயிற்றுவித்தார். அவரது அன்புள்ள சீடராகவும் விளங்கினார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர் 1982 ஆம் ஆண்டு "வாழும் கலை" நிறுவனத்தைத் தொடங்கினார். தலாய் லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புகள் கழகத்தை தொடங்கினார். இதன் நோக்கம் "மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதுமே" ஆகும்.
சாய் தன்ஷிகா
இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 20-ம் தேதி 1989-ம் ஆண்டு பிறந்தார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு மாடலிங் மீது ஆர்வம் கொண்டு மாடலிங் வேலையைக் கவனித்து வந்தார்.பின் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 2006-ம் ஆண்டு வெளியான “திருடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படத்தில் லீடிங் ரோலில் நடித்தார். இப்படம் இவருக்கு ஒரு தக்க இடத்தைப் பிடித்துத் தந்தது. பாலா இயக்கத்தில் வெளிவந்த, “பரதேசி” படத்தில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பின் மூலம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரின் ஆதரவைப் பெற்றார். இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கருணாஸ்
தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும். அரசியல்வாதியுமான இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
"முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.