சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபலங்கள் குறித்து தெரியுமா?
தென்னிந்தியாவில் முக்கிய மாவட்டமான சிவகங்கை சிவகங்கையில் பிறந்த பிரபலமானவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இராணி வேலு நாச்சியார்
வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். 1730-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார்.
இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ஆவார். ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத்தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார்.
இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருது சகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப்பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை. அது சுமார் 1796ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுக திரைப்படமான பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து 'கஞ்சா கறுப்பு' என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தனது மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும் வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார். இவர் ராம், சிவகாசி, சண்டைக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, அரை எண் 305ல் கடவுள், அழகிய தமிழ்மகன், களவாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சீமான்
சீமான் ஒரு அரசியல்வாதி ஆவார். பாரதிராஜாவின் படங்கள் மற்றும் மணிவண்ணனின் பணியால் ஈர்க்கப்பட்டதால், திரைப்படங்களை இயக்குவதை தொழிலாக தேர்ந்தெடுத்தார். பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்கி தனது திரை வாழ்க்கையை துவங்கினார். 2006ல், நடிகர் மாதவனை வைத்து தம்பி எனும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் உரிமைகளுக்காக பிரச்சாரகராக அறியப்படும் சீமான், 1958ல் ஆதித்தனாரால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தை 18 மே 2010ல் நாம் தமிழர் கட்சியாக மாற்றி அரசியலில் காலம் இறங்கினர். தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார் சீமான்.
பா சிதம்பரம்
பா சிதம்பரம் ஒரு அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தில் செப்டம்பர் 16, 1945 ம் ஆண்டு பிறந்தார். ப.சிதம்பரம் 1967ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் நாளிதழில் சிறிதுகாலம் பணியாற்றினார். சட்டம் பயின்ற இவர், மூத்த வழக்கறிஞர் நம்பியார் என்பவரிடம் இளம் வழக்கறிஞராக சேர்ந்து பயிற்சிபெற்றார். பின்னர் தனித்துத் தொழில்புரிந்து 1984ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞரானார். இவர், 1972ஆம் ஆண்டில் இந்திராகாந்தியின் தலைமையிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சி. சுப்பிரமணியத்தின் பரிந்துரையால் உறுப்பினர் ஆனார்.
1973ஆம் ஆண்டில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.1976ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பை வகித்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரசு சனநாயகப் பேரவையின் சார்பில் இந்திய தேசிய காங்கிரசின் சின்னத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அமைச்சரானார் ப. சிதம்பரம். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.
காந்திமதி
காந்திமதி ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை என்ற இடத்தில் ஆகஸ்ட் 30, 1945ம் ஆண்டு பிறந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான யாருக்காக அழுதான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 16 வயதினிலே, சின்னதம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன், முத்து, மாணிக்கம், அகல் விளக்கு, வால்டர் வெற்றிவேல், போர்ட்டர் பொன்னுசாமி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.
தமிழ் திரையுலகில் ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைப்படங்களில் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக "காந்திமதி அக்கா" என அழைக்கப்பட்டவர். இவர் சில காலமாக தனது உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த காந்திமதி செப்டம்பர் 9, 2011 அன்று தனது 65வது வயதில் காலமானார்.
சுபா வீரபாண்டியன்
சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏப்ரல் 22, 1952ம் ஆண்டு பிறந்தார். இவர் சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறைமறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர்.
சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார்.
ஜெ மகேந்திரன்
மகேந்திரன் ஒரு திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி என்ற இடத்தில் ஜூலை 25, 1939ம் ஆண்டு பிறந்தார்.திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே. இவர் நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு காலமானார்.
சின்னப்பொண்ணு
சின்னப்பொண்ணு ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம், சூரணம் என்ற ஊரில் பிறந்தவர். தனது 13 -ஆவது வயதில், கோவில் திருவிழா மற்றும் தேவாலயங்களில் பாடல்கள் பாட தொடங்கினார். அதன் பிறகே, கோட்டைசாமியுடன், இணைந்து நாட்டுப்புறப் பாடல்களை பாட தொடங்கினார். இவாறு படிப்படியாக தனது பாடல் துறையில் முன்னேறினார்.
2004ம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தில் "வாழ்த்துறேன் வாழ்த்துறேன்" என்ற பாடல் மூலம் இவரது குரலும், முகமும் திரைத்துறைக்கு அறிமுகமானது. அதன் பிறகு 2008 -ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தில் வந்த நாக்கு முக்க பாடல் மூலம் மேலும் பிரபலமானார். இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் பாடி வருகிறார்.
கரு பழனியப்பன்
கரு பழனியப்பன் ஒரு திரைப்பட இயக்குநரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மார்ச் 6, 1972ம் ஆண்டு பிறந்தார். 2003 ம் ஆண்டு இவர் இயக்கிய பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை உள்ளட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் தொகுப்பாளராக இருந்த 'தமிழா தமிழா' என்ற நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.