புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து தமிழ்நாட்டையே கலக்கிய பிரபலங்கள் பற்றி தெரியுமா?
தென்னிந்தியாவில் முக்கிய மாவட்டமான புதுக்கோட்டையில் பிறந்த பிரபலமானவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சகாயம் ஐஏஎஸ்
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் மார்ச் 22,1962ம் ஆண்டு பிறந்தார்.
ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர் சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' எனும் வாசகத்தை தனது இருக்கையின் பின்புறம் இட்டிருந்தார் சகாயம். லஞ்சத்தை நிராகரிப்பதன் மூலம் அவர் அடிக்கடி அரசியல்வாதிகள் மற்றும் மாநிலத்தில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களை எரிச்சலூட்டியுள்ளார்.
ஊழலை ஒழிப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 29 ஆண்டு பணிக்காலத்தில் 26 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்.2-ம் தேதி கடிதம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,சமூகத்துக்கு தனது பங்களிப்பை நேர்மையாக செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோபிநாத் சந்திரன்
கோபிநாத் சந்திரன் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜூலை 4, 1975 இல் பிறந்தார். 2006ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் இருப்பதனால்,
இவர் நீயா நானா கோபிநாத் என்று பிரபலமாக அறியப்படுகிறார். மக்கள் யார் பக்கம், சிகரம் தோட்ட மனிதர்கள், நடந்தது என்ன?,என் தேசம் என் மக்கள் உள்ளட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நீயும் நானும், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, பாஸ்வேர்டு, நேர், நேர் தேமா உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
முத்துலட்சுமி ரெட்டி
இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886ம் ஆண்டு பிறந்தார். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் கால கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912ல் நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி. சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கினார். அதற்காகப் பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையான இது சுமார் 80000 நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளது. முத்துலட்சுமி 1968ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி மறைந்தார்.
ஜெமினி கணேசன்
ஜெமினி கணேசன் ஒரு திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். 16 நவம்பர் 1920ல் புதுக்கோட்டையில் பிறந்தார். இவர் மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை-யில் பயின்று வேதியியலில் அறிவியல் இளவர் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார். கல்லூரிக்கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர், ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்யும் கேஸ்டிங் டைரக்டராகப் பணியாற்றினார். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. 1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் முதன்முறையாக சிறிய வேடம் ஒன்றில் நடித்த ஜெமினி கணேசன், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு காலமானார்.
சி விஜயபாஸ்கர்
இவர் ஒரு அரசியல்வாதியும், எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமத்தில் 8 ஏப்ரல் 1974ம் ஆண்டு பிறந்தார். சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (RMMCH) தனது முறையான கல்வியை முடித்தார் .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2001ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும், 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் விராலிமலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 முதல் 2021 வரை தமிழ்நாடு சுகாதார அமைச்சராக இருந்தார்.
செந்தில் கணேஷ்
இவர் ஒரு கிராமிய மக்களிசை பாடகர் மற்றும் திரைப்பட பாடகர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி என்ற இடத்தில் 08-04-1986ல் பிறந்தார். திருச்சிராப்பள்ளி கல்லூரியில் எம்.எஃப்.ஏ மாணவராக பட்டம் பெற்றார். அதன் பிறகு, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் இசை ஆசிரியராக தொழில் ரீதியாக பயிற்சி பெற்றுள்ளார்.
2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் 6வது போட்டியில் செந்தில் கணேஷ் முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார். தனது 15 வயதில், தனது குரு திரு.தங்கையா இசையமைத்த "மண்ணுக்கேத்த ராகம்" ல் தனது முதல் பாடலைப் பாடி பதிவு செய்தார். இப்போது வரை இவர் 3000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டிலும் இன்னும் பல இடங்களிலும் நடத்தியுள்ளார். மேலும் திரைப்படங்களிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்.
தம்பி ராமையா
இவர் ஒரு திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் ராராபுரம் என்ற இடத்தில் 27 பிப்ரவரி 1956ம் ஆண்டு பிறந்தார். மலபார் போலீஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்த வருகிறார்.
பிரபு சாலமனின் காதல் திரைப்படமான மைனாவில் (2010) ஒரு நடிகராக ஒரு நட்பு காவலராக நடித்ததன் மூலம் அவர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார் மற்றும் அவரது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். மேலும், மனு நீதி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், மாமியார் குடும்பம் போன்ற திரைப்படங்களை தம்பி ராமையா இயக்கியுள்ளார்.
பாண்டிராஜ்
இவர் ஒரு திரைப்பட இயக்குநர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை என்ற இடத்தில் 7 ஜூன் 1976ம் ஆண்டு பிறந்தார். இவர் 2009ல் இயக்கிய பசங்க திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, பசங்க 2, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கே.எம். காதர் மொஹிதீன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக
கே.எம். காதர் மொஹிதீன்
இருக்கிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற கிராமத்தில் 5-1-1940ம் ஆண்டு பிறந்தார்.சென்னை பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறு படிப்பை படித்தார். அரபி, உருது ஆகியவற்றில் டிப்ளமோ படித்துள்ளார்.14வது லோக்சபாவில் உறுப்பினராக இருந்தவர். வேலூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேஎம் காதர் மொஹிதீன் வாழும் நெறி உள்ளிட்ட பல்வேறு மதம் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். தமிழில் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் புனைந்துள்ளார். முபாரக், தாருல் குரான் உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும் ஆசிரியராக இருந்துள்ளார். மதச் சார்பற்று பல்வேறு சமூக ஏழைகளுக்கும் உதவியுள்ளார். இளம் வயதிலேயே ஏழைகளுக்கு உதவுவதற்காக அமைப்பைத் தொடங்கியவர். ஏழைகளுக்கு வட்டியில்லாத கடன் கொடுக்க பாடுபட்டவர் ஆவார்.
ரமா
இவர் ஒரு திரைப்பட துணை நடிகை ஆவார். தமிழ்நாடு அணியின் விளையாட்டு வீராங்கனையாக இயக்குநர் பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் (1990) படத்தில் நடித்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்தார்.
2014ம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். கத்தி (2014) திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.