தூங்காநகரமான மதுரையில் பிறந்த தவிர்க்க முடியாது பிரபலங்கள் தெரியுமா..?

Vijayakanth Madurai Vadivelu Vairamuthu Mani Ratnam
By Karthick Sep 14, 2023 10:55 AM GMT
Report

 மதுரையில் பிறந்து அரசியல் முதல் சினிமா வரை கோலோச்சிய பிரபலங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஜனா கிருஷ்ணமூர்த்தி 

கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக கட்சியின் முன்னாள் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார். கடந்த 1928-ஆம் ஆண்டு ஜனா கிருஷ்ணமூர்த்தி மதுரையில் பிறந்தவராவார். தனது சட்டபடிப்பை சென்னை சட்டக் கல்லூரியில் முடித்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞராக சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு பிறகு அரசியலில் ஈடுபட துவங்கினார். 1940-ஆம் ஆண்டு முதல் RSS இயக்கத்தில் ஈடுபட்டு வந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து பாஜக கட்சி உருவாக முக்கிய பங்காற்றினார்.   

famous-personalities-from-madurai

கட்சியின் பொதுச் செயலாளராக முன்னேறிய ஜனா கிருஷ்ணமூர்த்தி பின்னர், கட்சியின் தேசிய தலைவராக 2001-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் ஜனா கிருஷ்ணமூர்த்தி சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். காமராஜருக்குப் பிறகு இந்தியாவில் ஒரு தேசியக் கட்சிக்குத் தலைமை தாங்கிய முதல் தமிழ் அரசியல்வாதி இவரே. 

என்.எம்.ஆர். சுப்பராமன்

1905 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த என்.எம்.ஆர். சுப்பராமன் "மதுரை காந்தி" என இன்றளவும் போற்றப்பட்டார். மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியான என்.எம்.ஆர். சுப்பராமன், வெளிநாட்டில் தனது படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

famous-personalities-from-madurai

காந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்து சத்தியாக்கிரக இயக்கங்களிலும் பங்கேற்ற என்.எம்.ஆர்.சுப்பராமன், இதன் காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறை வாசமும் சென்றார். மதுரை நகராட்சித் தலைவராக இருந்த இவர், 1962 முதல் 1967 வரை மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

அகஸ்டஸ் டி மோர்கன் - கணிதவியலாளர்

மதுரையில் பிறந்த ஆங்கிலேயரான அகஸ்டஸ் டி மோர்கன்(Augustus De Morgan) கடந்த 1806-ஆம் ஆண்டு பிறந்தார். 7 மாத குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

famous-personalities-from-madurai

லண்டன் கணிதவியல் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த இவர், பிரபல கணிதவியலாளராகவும் தர்க்கவியலாளராகவும் பின்நாளில் உருப்பெற்றார். De Morgan's laws, De Morgan algebra போன்ற டிமோர்கன்(De Morgan) சட்டங்களை வகுத்தார். இவரை பெருமைப்படுத்தும் வகையில் லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியின் கணிதத் துறையின் மாணவர் சங்கம், ஆகஸ்ட் டி மோர்கன் சொசைட்டி(Augustus De Morgan Society) என்று அழைக்கப்படுகிறது.   

மணிரத்னம் 

இந்திய சினிமாவின் மூத்த முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணி ரத்னம் பிறந்த ஊர் மதுரை. கடந்த 1956 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த அவர், கடந்த 1983-ஆம் ஆண்டு பல்லவி அனு பல்லவி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் தமிழில் படம் இயக்க ஆரம்பித்தார்.

famous-personalities-from-madurai

1986-ஆம் ஆண்டு மௌன ராகம் படத்தின் மூலம் வெற்றி பெற துவங்கிய அவர், தற்போது வரை நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, இருவர், அலைபாயுதே, பொன்னியின் செல்வன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இது வரை 6 தேசிய விருது, 4 ஃபிலிம் பேர், 6 ஃபிலிம் பேர் சவுத் போன்ற விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

விஜயகாந்த் 

மதுரையில் பிறந்த பிரபலங்களை குறித்து குறிப்பிடும் போது நிச்சயமாக விஜயகாந்தை ஒதுக்கிவைத்து விட்டு பேசமுடியாது. 1952-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர், 1979-ஆம் ஆண்டு திரைத்துறையில் கால்பதித்தார்.

famous-personalities-from-madurai

சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் வெற்றி படங்களை துவங்கிய இவர் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டுகளின் மிக பெரிய நாயகனாக இருந்தார். பின்னர் 2005-இல் தே.மு.தி.க'வை துவங்கி அரசியலில் ஈடுபட துவங்கிய விஜயகாந்த், 2011-ஆம் ஆண்டு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார்.

வைரமுத்து 

1953 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் கவிப்பேரரசு என போற்றப்படும் வைரமுத்து. இந்திய அளவில் பிரபல படலாசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்து வரும் வைரமுத்து, தொடர்ந்து அனைத்து தரப்பு தமிழ் மக்களாலும் போற்றப்படுகிறார்.

famous-personalities-from-madurai

தன்னுடைய 40-ஆண்டு திரைவாழ்க்கையில், இது வரை 7500-க்கும் பாடல்களை இவர் இயற்றியுள்ளார். தேசிய திரைப்பட விருதை 7 முறையும், தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கலைமாமணி விருது மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் விருதும் பெற்றுள்ளார். அதே போல, சாகித்ய அகாடமியின் விருதையும் வென்றுள்ள வைரமுத்துவிற்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷனை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.   

வடிவேலு

தமிழ் திரையுலகின் தற்போது உச்ச நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கும் வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை தான் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை. எளிய குடும்பத்தில் பிறந்த வடிவேலு, ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை பாத்திரங்களில் துவங்கி பின்னர் முக்கிய நடிகராக உருமாறினார்.


2000-ஆம் ஆண்டுகளில் பல வருடங்களில் வாரம் வெளியாகும் 5 படங்களில் நிச்சயமாக 3 படங்களிலாவது வடிவேலு இடம்பெற்றிருப்பார். அந்த அளவிற்கு மிகவும் பிஸியான முக்கிய நடிகரான வடிவேலு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் மாமன்னன் படத்தில் நடித்து மிகவும் பாராட்டுகளை பெற்றார். தற்போது வரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், இது வரை 3 தமிழ்நாடு விருதை வென்றுள்ளார்.

சாலமன் பாப்பையா

பட்டிமன்றங்கள் என்றால் சாலமன் பாப்பையா தான் என கூறும் அளவிற்கு பெரும் பிரபலத்தை தனது நகைச்சுவை கலந்த விவாத திறமையின் மூலமாகவும் பெற்றவர் சாலமன் பாப்பையா. கவிஞர் சுப்பிரமணிய பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டு, தனது திறனை வளர்த்துகொண்டார் .

famous-personalities-from-madurai

இதுவே அவருக்கு பெரும் புகழை பின்நாளில் பெற்று கொடுத்தது. 44 வருடங்களாக பேச்சு துறையில் ஈடுபட்டு வரும் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தின் மாஸ்டர் மாறியுள்ளார். இளைஞர்களை ஊக்குவிக்கும் வலுவான பேச்சுத்திறனும் ஆக்கபூர்வமான கருத்துகளை எடுத்துரைப்பதிலும் இவரது பட்டிமன்றங்கள் பெரும் வரவேற்பை தற்போதும் பெற்று வருகின்றது. 2021-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.