வங்காளக்கரையோர கடலூரில் பிறந்து சாதனைகளை புரிந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா..?
கடலூரில் பிறந்து கடலளவு சரித்திர சாதனைகள் செய்துள்ள நபர்களை குறித்து தற்போது காணலாம்.
வள்ளலார்
திருவருட் பிரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்கம் எனப்படும் வள்ளலார் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற மார்கத்தை நிறுவினார். தனது முதன்மை கொள்கையாக 'கொல்லாமை' கொள்கை அதாவது உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையை பரப்பினார். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்று கூறிய வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பே 6000 பாடல்களை கொண்ட திருவருட்பா ஆகும்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் " சத்ய ஞான சபை " என்ற சபையை நிறுவ இன்றளவும் இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு மக்ககளின் பசியை தீர்த்து வைத்து வருகின்றது. அக்டோபர் 5-ஆம் தேதி 1823-ஆம் ஆண்டு கடலூரில் பிறந்த இவர், தனது 50-தாவது வயதில் 1874-இல் இயற்கை எய்தினார்.
அகரம் சுப்புராயுலு ரெட்டியார்
திவான் பகதூர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் எனப்படும் அகரம் சுப்புராயுலு நாயுடு மெட்ராஸ் பிரேசிடன்சியின் முதல் முதல்வராவார். அப்போது தென் ஆற்காடாக இருந்த கடலூரில் பிறந்த இவர் ஆரம்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் 1916-இல் நீதிக்கட்சியில் இணைந்தார்.
1920 -ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 1921-ஆம் ஆண்டின் ஜூலை 11-ஆம் தேதி வரை இன்றைய தமிழகத்தின் அப்போதைய மெட்ராஸ் பிரேசிடன்சியின் முதல் முதல்வராக பணியாற்றினார். புதிய அரசாங்கத்தில் கல்வி, பொதுப்பணி, கலால் மற்றும் பதிவு ஆகிய துறைகளை வகித்த இவர், உடலநல குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த சுப்புராயுலு ரெட்டியார் நவம்பர் 1921-ஆம் தேதியில் இயற்கை எய்தினார்.
கி வீரமணி
பெரியார் துவங்கிய திராவிட கட்சியின் தற்போதைய தலைவரான கி வீரமணி 1933-ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். தனது 12-வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றிய வீரமணி, சிறுவயது முதலே திராவிட கட்சியில் பயணித்து வருகின்றார்.
திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக பெரியாரால் கடந்த 1962-இல் நியமிக்கப்பட்ட இவர், பெரியார் மற்றும் மணியம்மையின் மறைவிற்கு பிறகு கடந்த 2003-ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். தற்போது வரை திராவிட கழகத்தின் மூலம் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றி வரும் கி வீரமணிக்கு இந்த ஆண்டு தகைசால் தமிழர் என்ற விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்தது.
ஜெயகாந்தன்
தமிழ் எழுத்தாளர்களில் பெரும் படைப்பாளியாக மதிக்கப்படும் ஜெயகாந்தன், கடந்த 1934-ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன், எண்ணற்ற வேலைகளை செய்து பின்னர் பத்திரிகை உதவி ஆசிரியராகவும் முழு நேர எழுத்தாளராகவும் மாறினார்.
சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் வெளியான இவரின் படைப்புகள் பெரும் வரவேற்பை பெற தொடர்ந்து சிறப்பான பல படைப்புக்களை வழங்கி 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளராக உருப்பெற்றார். 1972 சாகித்திய அகாதமி விருது, 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது போன்ற கவுரவங்களை பெற்ற ஜெயகாந்தன் 2015-ஆம் ஆண்டில் தனது 80-தாவது வயதில் இய்ற்கை எய்தினார்.
வெற்றிமாறன்
தமிழ் திரையுலகை தாண்டி தற்போது இந்திய அளவில் மிக முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் வெற்றிமாறன், கடந்த 1975-ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். பாலுமஹேந்திராவிடம் உதவியாளராக இணைந்த வெற்றிமாறன், கடந்த 2007-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "பொல்லாதவன்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகினார்.
தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்,விடுதலை போன்ற சிறப்பான படைப்புக்களை வழங்கிய வெற்றிமாறன், தற்போது வரை இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். தனது படங்களில் அரசியலை சாதாரண மக்களுக்கான அரசியலை மிக அழுத்தமாக பதிவு செய்து வரும் வெற்றிமாறன், தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகின்றார்.