செங்கல்பட்டில் பிறந்து சரித்திரத்தில் இடம் பெற்றவர்களை குறித்து தெரியுமா..?

Tamil nadu Chengalpattu
By Karthick Sep 20, 2023 09:15 AM GMT
Report

விஜயநகர மன்னர்களின் தலைநகரான செங்கல்பட்டில் பிறந்த பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

ஓ. வி. அழகேசன்

ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் எனப்படும் ஓ. வி. அழகேசன் 6 செப்டம்பர் 1911-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் தான் பிறந்தார். தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியான இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தமிழக தலைவராக திகழ்ந்தார். அரசியல்வாதி என்பதை தாண்டி விடுதலை போராட்ட வீரராகவும் அறியப்படும் அழகேசன், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

famous-personalities-from-chengalpattu

1951, 1962, 1967, 1971-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1968 முதல் 1971 வரை எத்தியோப்பியாவிற்கு இந்திய தூதராகப் பணியாற்றிய இவர் கடந்த 1992-ஆம் ஆண்டில் தனது 81-வது வயதில் இயற்கை எய்தினார்.

வஹீதா ரஹ்மான் 

பாலிவுட் திரையுலகின் மிக முக்கிய நடிகையாக இன்றளவும் போற்றப்படும் வஹீதா ரஹ்மான் செங்கல்பட்டை சார்ந்தவரே. 1938-இல் பிறந்த இவர், சினிமாவின் பொற்காலம் என போற்றப்படும் 1950-களில் அறிமுகமான வஹீதா, இந்தியில் இயக்குனர் குரு தத்துடன் இணைந்து பணிபுரிந்த படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

famous-personalities-from-chengalpattu

இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ள வஹீதா ஒரு தேசிய விருதும், 3 ஃபிலிம் பேர் விருதையும் வென்றுள்ளார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற கௌரவங்களை அரசு இவருக்கு அளித்து சிறப்பித்திருக்கும் நிலையில், வயதின் காரணமாக தற்போது நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார் வஹீதா.

நாசர்

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களில் ஒருவர் நாசர். கதாநாயகன், இயக்குனர், துணை நடிகர், வில்லன் நடிகர், காமெடி நடிகர் என கொடுக்கப்பட்ட அனைத்து பாத்திரங்களில் பெரிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தி தென்னிந்தியாவின் மிக முக்கிய நடிகராக திகழ்ந்து வருகின்றார்.   

famous-personalities-from-chengalpattu

நடிகர் என்பதை கடந்து பாடலாசிரியர், பாடகர், வசனகர்த்தா என பல துறைகளிலும் பெரும் ஆதிக்கம் செலுத்திய நாசர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார். தமிழக அரசு விருதுகள், நந்தி விருது, ஆந்திர அரசு விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார் நாசர் தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகின்றார்.

ஜெனரல் கிருஷ்ணசுவாமி "சுந்தர்ஜி"

இந்தியாவில் தற்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படும் பஞ்சாப்பின் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தாக்குதலை உத்தரவிட்ட ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தரராஜன் செங்கல்பட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தான்.

famous-personalities-from-chengalpattu

1928-இல் பிறந்த இவர் 1945-இல் இரண்டாம் உலக போரின் போது இந்திய ராணுவத்தில் இணைந்தார். 1971 இந்திய பாகிஸ்தான் போர், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் போன்றவற்றில் பங்காற்றிய கிருஷ்ணசுவாமி 1986 முதல் 1988-ஆம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தின் தளபதியாக பதவி வகித்தார். தன்னுடைய 70-தாவது வயதில் 1999-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.