‘பறவையே எங்கு இருக்கிறாய்’ - வானில் பறந்தாலும் பாடலாய் வாழ்கிறார்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலமானார்.
இவரது மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்று இவரது நினைவு நாள். கவிதைகள் ஆயிரம் பேர் எழுதலாம். ஆனால் கவிதைகளுக்கு உயிர்கொடுத்தவரே நா.முத்துக்குமார் தான்.

தமிழ் திரையுலகில் பிறப்பு முதல் மரணம் வரையிலான அனைத்தையும் தன் பாடல் வரிகளில் கொட்டி தீர்த்த காவிய கவிஞர். தமிழ் திரையுலகுக்கு கிடைத்த தங்கம் என்றே கூறலாம்.
இவரது வரிகளிலேயே வாழ்க்கையின் அனைத்தையும் உள்ளடக்கிவிடுவார். இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்துள்ளது. தொடக்கத்தில் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலு மகேந்திராவுடன் நான்கு வருடங்கள் பணியாற்றினார்.

பிறகு 2000ம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கும் வீரநடை திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் அஜித்குமார் நடித்த கிரீடம் படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார். இவர் 2006ல் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார்.
கற்றது தமிழ்,வெயில்,சிவா மனசுல சக்தி,7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன்,கேடி பில்லா கில்லாடி ரங்கா,தங்க மீன்கள்,சைவம்,கஜினி,அயன்,எங்கேயும் எப்போதும்,வெப்பம்,சிவாஜி,பேரன்பு,தரமணி என பல படங்கள் வெற்றியடைய இவரின் பாடல் வரிகளே காரணம்.

இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருது,பிலிம்பேர் விருது,விஜய் அவார்ட்ஸ்,சைமா விருது,இந்திய அரசின் தேசிய விருது என எல்லா விருதுகளையும் பெற்றுள்ளார். தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களில் இவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருதுகளை பெற்றார்.
மிக எளிய நடையில் இவர் ஏராளமான கவிதை நூல்களை எழுதியுள்ளார். பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி கவிதை தொகுப்புகள் மிகவும் பிரபலம். இவரது வரிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இவரது வார்த்தைகள் மூலமே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். இவரது வரிகளில் பாடவும், இசையமைக்கவும் அனைவரும் பெருமை கொள்கின்றனர்.
இவர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், இவரின் பாடல் வரிகளை கூறி மரணம் குறித்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார். இதில், ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது என்ற பாடலின் விளக்கத்தை கூறி கருத்து தெரிவித்தார்.
தன் மறைவுக்கே விளக்கம் அளித்தார் போல் அந்த கருத்து இருந்ததாக அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இப்படிப்பட்ட ஒரு கவிதை இன்று நம்மோடு இல்லை. இவர் இவ்வுலகில் இல்லை என்றாலும், இவரது பாடல்கள், கவி மூலம் என்றும் வரிகளாய் வாழ்ந்து வருவார்....