அதிமுகவிலிருந்து பிரிந்து சுயேட்சையாக போட்டியிடும் பிரபல நடிகர்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதனையடுத்து, சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருக்கிறார் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி. இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். நடிகர் மயில்சாமி சுயேச்சையாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடையும் வரையில் அதிமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், அதிமுகவில் இருந்து வெளியேறினார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும், கொரோனா ஊரடங்கின் போதும் அந்த பகுதி மக்களுக்கு உணவு உள்பட பல்வேறு உதவிகளை செய்தார். விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமிக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.