காவலர் தாக்கி பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விவசாயியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் காவல்துறை சோதனையின் போது காவலர் தாக்கி பலியானார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கேள்விக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவலர் தாக்கி பலியான முருகேசனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவலர் தாக்கி விவசாயி பலியான துயரச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.