திருநங்கையாக மாறிய ஆணுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர் - குவியும் பாராட்டு
கடலூரில் திருநங்கையாக மாறிய ஆணுக்கு பெற்றோர் மஞ்சள் நீராட்டு விழா நடத்திய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களும் தங்களது திறமைகளை இந்த உலகிற்கு வெளிக்கொண்டு வருவது பாராட்டுதலுக்குரியது. ஆனால் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களை அவரின் குடும்பத்தார் தங்களோடு வைத்துக் கொள்வதில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இன்றளவும் உள்ளது.
இதற்கிடையில் திருநங்கையாக மாறிய ஒருவரை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டுள்ள சம்பவம் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம்.விருத்தாசலம் பகுதியில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி- அமுதா தம்பதியினர் மகன் நிஷாந்த் என்பவர் டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே அவருக்கு ஹார்மோன் பிரச்சனைகளால் இவருக்கு பெண் தன்மை அதிகமாக காணப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 ஆவது வயதில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு நிஷா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அவரை வீட்டுக்கு அழைத்து வந்த பெற்றோர் ஞ்சள் நீராட்டு விழாவும் நடத்தி அழகு பார்த்துள்ளனர். விழாவை உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள் அனைவரையும் அழைத்து சீரும் சிறப்புமாக செய்துள்ளனர். இந்நிகழ்வு மாற்றுப் பாலினத்தவர்களை குடும்பத்தினர் ஒதுக்குவது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.