பச்சிளம் குழந்தை கொடூரமாக கொலை, தாய் மரணம் - குடும்பத்தினரை கைது செய்த போலீஸ்
பழனியருகே கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் சார்பில் இன்று விசாரணை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியை சேர்ந்த மணியன் - தங்கம் ஆகியோரது மகள் மங்கையர்க்கரசி (29). இவரும், இவரது உறவினரான அபீஷ்குமார்(24) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அக்கா தம்பி உறவுமுறை எனக்கூறி மங்கையர்க்கரசியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மங்கையர்க்கரசி கர்ப்பம் தரித்தார். இதுகுறித்து தெரிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மங்கையர்க்கரசிக்கு கடந்த 20ம் தேதி வீட்டிலேயே வைத்து பெற்றோரே பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது பிறந்த ஆண் குழந்தையை கொன்று அருகில் உள்ள கிணற்றில் வீசிய நிலையில் மங்கையர்க்கரசியின் உடல்நிலையும் மோசமாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை செய்த ஆயக்குடி போலீசார் மங்கையர்க்கரசியின் தாய், தந்தை, அக்கா, தம்பி காளிதாஸ் மற்றும் காதலன் அபீஷ்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், முரளிகுமார் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.
ஆயக்குடியில் சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆணைய உறுப்பினர்கள் பழனி சார் ஆட்சியர் அலவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விவகாரத்தில் காவ்லதுறை அதிகாரிகள் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த விசாரணையின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, குழந்தைகள் பாதுகாப்பு காவல் ஆய்வாளர் செந்தாமரை, ஆயக்குடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.