நடத்தையில் சந்தேகம்; மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கணவன் - வெறிச்செயல்!
அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவியை ஓட ஓட விரட்டி கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடிக்கடி தகராறு
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார்-மீனா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும் மனைவி மீனாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு காரணமாக மீனா, கோவித்துக்கொண்டு அவ்வப்போது தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மீனாவை சமாதானம் செய்து ராஜ்குமார் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சந்தேகம் காரணமாக மீண்டும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜ்குமார் அரிவாளால் மீனாவை வெட்ட முயன்றுள்ளார்.
மனைவி வெட்டி கொலை
இதனால் பயந்துபோன மீனா வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் விரட்டி வந்த ராஜ்குமார், மீனாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அங்கிருந்து ராஜ்குமார் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தப்பியோடிய ராஜ்குமாரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் ராஜ்குமார் தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.