ஒரு குடும்பம் ஆள்வதற்கு எப்போதும் இந்த கட்சி தலை வணங்காது- முதல்வர் பேச்சு
சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு சதி செய்து அ.தி.மு.கவை கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள். எச்சரிக்கையோடு இருந்து ஒவ்வொரு தொண்டனும் அ.தி.மு.கவை கட்டி காக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சர் பொறுப்பேற்று சிறப்பான ஆட்சியை கொடுத்து வந்தோம்.
இடையிலே சில பேர் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர்கள் 18 பேரை பிரித்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார்கள். கட்சியை உடைக்க முயற்சித்தார்கள். அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அரசு ஒற்றுமையாக இருந்து அதை முறியடித்து ஜெயலலிதாவின் அரசு மீண்டும் நிலை நாட்டப்பட்டது. மீண்டும் அவர் புறப்பட்டுவிட்டார், கிட்டதட்ட 4 ஆண்டுகாலம் அலைந்து அலைந்து பார்த்தார் டி.டி.வி தினகரன். அவர், 10 ஆண்டுகாலம் கட்சியில் கிடையாது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்.
சந்தர்ப்ப சூழ்நிலையில் கட்சியில் இணைந்து கொண்டார். தற்போது சதி வலை பின்னி வருகிறார். அ.தி.மு.க ஒரு போதும் அவரை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தொண்டர் ஆளுகின்ற கட்சி, தொண்டர்களால் நிறைந்த கட்சி. உழைப்பால் உயர்ந்த கட்சி, ஒரு குடும்பம் ஆள்வதற்கு எப்போதும் இந்த கட்சி தலை வணங்காது.
அ.தி.மு.க தொண்டர் மட்டுமே கட்சியிலிருந்து முதலமைச்சராக வர முடியும். உழைப்பவர்களுக்குதான் இங்கு இடம் உண்டு. விசுவாசம் உள்ளவர்களுக்குதான் இடம் உண்டு. இரண்டும் இருந்தால் யார் வேண்டுமானுலும் முதல்வர் ஆகலாம். அந்த நிலைப்பாடின் அடிப்படையில்தான் அ.தி.மு.க தொடரும்.
டி.டி.வி தினகரன் ஒரு போதும் இனி கட்சியை உடைக்க முடியாது. அவருடைய கனவும் பலிக்காது. ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.