கள்ள ஓட்டு போட்ட திமுக - வீடியோ காட்டிய பழனிசாமி!
கள்ள ஓட்டு போட்ட திமுக என ஆதாரத்தைக் காட்டி குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் பழனிசாமி!
நேற்றைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு இன்று சேலம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை பழனிசாமி நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கோவை நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பதட்டமான சூழல் சம்பந்தமாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதேபோல் சென்னையில் பல வார்டுகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கள்ள ஓட்டுகளை தி.மு.க.,வினர் பதிவு செய்துள்ளனர்.
தோல்வி பயத்தின் காரணமாக, சென்னை மாநகராட்சியில் பல பகுதிகளில் அத்துமீறி கள்ள ஓட்டுகளை அக்கட்சியினர் பதிவு செய்தனர்.
அ.தி.மு.க.,வினர் பொது மக்கள் சுட்டி காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை. திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயற்சி நடந்தது.
அங்கிருந்தவர்கள், மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். தடுக்க முயன்ற அதிகாரிகளை தி.மு.க.,வினர் பகிரங்கமாக மிரட்டி உள்ளனர்.
இவ்வாறு மிரட்டி, கள்ள ஓட்டுகளை தி.மு.க..,வினர் பதிவு செய்தனர் என்பதை டிவி மற்றும் பத்திரிகை வாயிலாக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று கூறிய பழனிசாமி வீடியோ ஆதாரங்களை அங்கு எடுத்து காட்டினார்.