கள்ளக்காதலால் கணவனை கொன்று கபட நாடகம் ஆடிய மனைவி - சிக்கியது எப்படி?
கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓவிய ஆசிரியரான கணவனை கொலை செய்துவிட்டு காணவில்லை என கபடநாடகம் ஆடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் சென்னை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா முதலாவது அலையின்போது சிவபுரம் வந்தவர் தன் குடும்பத்துடன் சிவபுரத்திலேயே தங்கி விட்டார். இவருக்கு மனைவி ஷோபனா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சுமார் 65 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அன்பழகன் தன் மனைவி குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு தூரத்து சொந்தமான அதே பகுதியில் வசிக்கும் தர்மராஜ் அடிக்கடி வீட்டிற்கு வருவது வழக்கம். ஷோபனாவிற்கு மகன் என்ற உறவு முறையை மறந்து தர்மராஜூடன் அவ்வப்போது சல்லாபத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
நாளடைவில் ஷோபனாவும் தர்மராஜும் கணவன்-மனைவி போல வாழ்ந்து அன்பழகன் இல்லாதபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரின் பழக்கத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை அரசல்புரசலாக கண்டறிந்த அன்பழகன் தர்மராஜை தன்னுடைய வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மற்றும் ஷோபனா இருவரும் சேர்ந்து அன்பழகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு அன்பழகன் வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது , சோபனா வகுத்துத் தந்த திட்டப்படி யாருக்கும் தெரியாமல் தர்மராஜ் , திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் அன்பழகனின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஷோபனாவின் துணையோடு தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனின் தொண்டைக்குழியில் கூர்மையான ஆயுதத்தை வைத்து பலமாகவும் ஆழமாகவும் குத்தியுள்ளார்கள்.
அப்பொழுது துடிதுடித்து அலறிய அன்பழகனின் வாயை பொத்தி துடிதுடிக்க கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.
அடுத்த நாள் காலை எதுவுமே நடக்காதது போல தர்மராஜுடன் சேர்ந்து சோபனா சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தன் கணவனை காணவில்லை என்று புகார் அளித்து கபட நாடகமாடி உள்ளார்.
ஏற்கனவே தர்மராஜை வீட்டை விட்டு அன்பழகன் துரத்தி அனுப்பிய பின்பும் தொடர்ந்து அன்பழகனின் வீட்டுக்கு தர்மராஜ் வருவதை கண்ட ஊர் மக்கள் தர்மராஜ் மீது சந்தேகம் அடைந்தனர்.உடனே சுதாரித்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி தலைமறைவாகினர்.
இதனால் அன்பழகனின் உடன்பிறந்த மூத்த சகோதரர் ராதாகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த சோபனா மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும் கண்டு பிடித்து விசாரித்ததில் அன்பழகனை கொலை செய்து ஆற்றில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில் அன்பழகன் புதைக்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறை காவல்துறை முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் குற்றவாளிகள் இருவரையும் கிராம மக்கள் மிகுந்த ஆக்ரோஷத்தோடு தாக்க முற்பட்டனர். கைநிறைய சம்பளம் வாங்கும் அமைதியான குணம் கொண்ட ஓவிய ஆசிரியரான கணவனை கொலை செய்துவிட்டு காணவில்லை என ஷோபனா கபடநாடகம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்தததால் அப்பகுதி மக்கள் ஷோபனாவை திட்டித் தீர்த்தனர்.
அமைதியான மகிழ்ச்சியான இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் சிறிய குடும்பத்தில் கூட இப்படிப்பட்ட காம இச்சையால் பல குடும்பங்கள் கெட்டு சீரழிந்து போகின்றது .அந்தந்தப் பகுதியில்
உள்ள காவல் நிலையத்தின் மூலமாக ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பெண்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.