கள்ளக் காதலனுடன் சேருவதற்காக குழந்தை அடித்தேன் - கொடூர தாயின் பகீர் வாக்குமூலம்
விழுப்புரம் மாவட்டம் மோட்டூரைச்சேர்ந்த பெண் தனது ஆண் குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், வெறியை தீர்க்கவே குழந்தையை அடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருப்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் - துளசி (23) தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துளசி தனது 2 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி அதை வீடியோ எடுத்து வந்துள்ளார். குழந்தையின் உடலில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என கணவன் கேட்டால் கீழே விழுந்து விட்டான் என கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சண்டை காரணமாக துளசி தனது தாய் வீடான ஆந்திரமாநிலம் சித்தூர் சென்று விட்டார். அப்போது தான் வீட்டில் இருந்த செல்போனில் வீடியோ பார்த்து வடிவழகன் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார்.
பின்னர் போலீசார் சித்தூர் அருகே உள்ள அவரது வீட்டில் துளசியை கைது செய்து செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சென்னையில் தங்கியிருந்த போது வேறு ஒரு நபருடன் துளசிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவருடன் மீண்டும் சேர்ந்து வாழவே குழந்தையை தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், 2 வயது குழந்தையை ஏன் தாக்கினாய் என கேட்டதற்கு பெரிய குழந்தை தாயை போல் உள்ளதாகவும், சின்ன குழந்தை தந்தையைபோல் உள்ளதாக காதலன் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆத்திரம் அடைந்து கணவனை தாக்குவதாக நினைத்து குழந்தையை தாக்கிய வீடியோ பதிவை சென்னையில் உள்ள காதலனுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.