போலி சிமெண்ட் தாயரித்து பெரிய நிறுவங்களின் பெயரில் விற்று வந்த நபர் கைது
திண்டுக்கல் அருகே போலியாக சிமெண்ட் தயாரித்து பெரிய நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்ய வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய பெரிய சிமெண்ட் நிறுவன கம்பெனிகளின் பெயர்களில் போலி சிமெண்ட் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது.
இத்தருணத்தில் விருதுநகர் அருகில் உள்ள பெரிய சிமெண்ட் ஆலை நிறுவனத்தின் பெயரை உபயோகித்து ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அந்த கம்பெனியின் பெயரிலேயே போலி சிமெண்ட் தயாரித்து விலை குறைத்து விநியோகம் செய்து வந்ததாக அக்கம்பெனி விற்பனை பிரதிநிதிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவர்கள் சிமெண்ட் ஏற்றி வரும் வாகனங்களை சோதனையிட்ட போது தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரித்து வாகனத்தில் கொண்டு வந்து நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட விலையைவிட குறைந்த விலைக்கு தரமற்ற சிமெண்டை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதனடிப்படையில் சிமெண்ட் ஏற்றி வந்த வாகனத்தையும் வாகன ஓட்டுநரையும் ஒட்டன்சத்திரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை விசாரணையின் போது தாராபுரம் பழனி சாலையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் இருந்து தயார் செய்யப்பட்டு கொண்டு வந்தது தெரியவந்தது.
ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் ஓட்டுநர் சண்முகவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.