பிரபல நடிகர் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: 30 நிமிடங்களில் முடக்கிய சைபர் கிரைம் போலீசார்
பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை,குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சார்லி. இவர் நேற்று முதல் ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததாக பதிவு ஒன்று வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் சார்லி தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் தான் இதுவரை கணக்கு தொடங்கவில்லை என்றும், தனது பெயரில் ட்விட்டரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிந்து பார்த்தபோது தான் எனக்கே தெரியும் என கூறினார்.
இந்நிலையில் புகார் அளித்த உடனடியாக சைபர் கிரைம் காவல் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது பெயரில் போலியாக தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கை 30 நிமிடங்களில் தடை செய்து விட்டனர். அதற்காக சென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என நடிகர் சார்லி தெரிவித்துள்ளார்.