போலி சுங்கச்சாவடி; ஒன்றரை ஆண்டுகளில் ரூ.75 கோடி வசூல் - பகீர் பின்னணி!
போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி சுங்கச்சாவடி
குஜராத் மாநிலத்தின் பாமான்போர்-கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், மோர்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த சாலையை ஒட்டி செயல்பட்டு வந்த ஓயிட் ஹவுஸ் டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் அதன் உரிமையாளர் சாலை ஏற்படுத்தி, சட்டவிரோதமாக சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.
இந்த சட்டவிரோத சுங்கச்சாவடியில் அங்கீகரிக்கப்பட்ட வகாசியா சுங்கச் சாவடியை விட கட்டணம் பாதியாக இருந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தனியார் சாலையைப் பயன்படுத்தி, குறைந்த கட்டணத்தை செலுத்தி வந்துள்ளனர்.
வழக்குப்பதிவு
இங்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்த முறையில் ரூ.75 கோடிக்கு கட்டண வசூல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் வெளியான நிலையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு, நிறுவனத்தின் உரிமையாளர்கள் அமர்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், இது தொடர்பாக மோர்பி மாவட்ட ஆட்சியர் கூறுகையில் "வகாசியா சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையிலிருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. காவல்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.