விவாகரத்தான பெண்களை மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் - எச்சரிக்கை!
விவாகரத்தான பெண்களிடம் பணமோசடி செய்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி ஒன்றில் வரன் பதிவு செய்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தான் நெதர்லாந்தில் மருத்துவராக பணிபுரிவதாகக் கூறி செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
அவரது பேச்சை நம்பிய அப்பெண்ணிடம் நாளடைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி லட்சக்கணக்கான பணத்தை அந்த நபர் பறித்துள்ளார். நாளடைவில் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து மேட்ரிமோனி நிர்வாகத்திடம் விசாரித்தபோது மோசடி கும்பலின் கைவரிசை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் டெல்லி உத்தம் மாவட்டத்திலுள்ள துவாரகா பகுதியில் பதுங்கியிருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த பாலினஸ் மற்றும் கிளேடாஸ் ஆகிய இருவர் மேட்ரிமோனி வெப்சைட் மூலம் 15க்கும் மேற்பட்ட விவாகரத்தான பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.