மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற காதல் கணவன்: திடுக்கிட வைக்கும் உண்மை சம்பவத்தின் பின்னணி
திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32). இவர் எலவம்பட்டி பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா (24) என்ற பெண், ஓட்டுனர் பயிற்சிக்கு வந்துள்ளார்.
சத்தியமூர்த்தி ஓட்டுனர் பயிற்சி அளிக்கும்போது திவ்யா உடன் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சத்தியமூர்த்தி திவ்யாவை திருவண்ணாமலை கோயிலில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தையை பராமரிக்க முடியாத காரணத்தினால் திவ்யா தனது பெற்றோரிடம் பேசி சமாதானம் ஆகி, தாய் வீட்டிற்கு வந்து தனது குழந்தையை வளர்த்து வந்தார்.
சத்தியமூர்த்தி தனது மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியை நலம் விசாரித்து இருந்து வந்தார். இந்த நிலையில், திவ்யாவின் உறவுக்கார பெண்ணுடன் சத்தியமூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அர்ச்சனா சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் அர்ச்சனாவை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற முடிவோடு சத்தியமூர்த்தி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சத்தியமூர்த்தி தனது மனைவியிடம் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது. எனவே நீ, நான், நமது மகள் மூன்று பேரும் இறந்து விடலாம் என கூறியுள்ளார்.
அப்போது திவ்யா நமக்கு பெண் குழந்தை உள்ளது அந்தப் பெண் குழந்தையை யார் காப்பாற்றுவது என்று சொல்லி தற்கொலைக்கு மறுத்துள்ளார்.
அப்போதே திவ்யாவுக்கும் சத்தியமூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிடுவேன் என்றும் மனைவியை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட சத்தியமூர்த்தி கடந்த மாதம்25ஆம் தேதி தாய் வீட்டில் இருந்த திவ்யாவை சனிக்கிழமை சாமி கும்பிட கோயிலுக்கு சென்று வரலாம் என கூறி மனைவியையும் மகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்களை அழைத்து வந்த சத்தியமூர்த்தி எலவம்பட்டி அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகிலுள்ள அவரது ஓட்டுநர் பயிற்சி அலுவலகத்தில் திவ்யாவிற்கு இரண்டு தூக்க மாத்திரைகளை கொடுத்து மயங்க வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து திவ்யாவை அருகில் இருந்த நிலத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி விட்டு அங்கிருந்து குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து சத்தியமூர்த்தியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர் எடுத்துச் சென்ற கார் வாலாஜா சோதனை சாவடியில் பதிவாகி இருந்தது. இதற்கிடையில் சத்தியமூர்த்தி ஒரு வீடியோ பதிவை போலீசுக்கு வெளியிட்டிருந்தார்.
அதில் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது. ஆகையால் என் மனைவியை கொலை செய்துவிட்டு நானும் என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவர் எடுத்துச் சென்ற காரை நிறுத்திவிட்டு குழந்தையுடன் தப்பியோடியுள்ளார்.
அதன்பின் விசாரணையில் அங்கு செவிலியர் படிப்பு படித்துக்கொண்டிருந்த திருப்பத்தூரை சேர்ந்த திவ்யாவின் உறவினரான அர்ச்சனாவை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
கொலையாளி சத்தியமூர்த்தியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
கொலையாளி சத்தியமூர்த்தி வைத்திருந்த பழைய செல்போனில் புதிய சிம் கார்டை போட்டு செல்போனை ஆன் செய்து உள்ளார். அப்போது அந்த டவர் லொகேஷன் போலீசாருக்கு வந்தது.
அதன் அடிப்படையில் நேற்று தஞ்சாவூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போல் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த சத்தியமூர்த்தியை கந்திலி போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அதன் பின்னர் சத்தியமூர்த்தியை திருப்பத்தூருக்கு கொண்டுவரப்பட்டு திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலால் தன் காதல் மனைவியை எரித்துக் கொன்ற சம்வம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது