வெளியே ஃபேன்சி ஸ்டோர், உள்ளே கள்ளநோட்டு அச்சடிப்பு - வசமாக சிக்கிய 3 பேர்!
கடைக்குள் கள்ளநோட்டு அச்சடித்து வந்த 3 பேரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஃபேன்சி ஸ்டோர்
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமைதீன், 50 வயதான இவருக்கு பேன்சி ஸ்டோர் உட்பட 3 கடைகள் சொந்தமாக உள்ளது. இதில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த உபாஸ் அலி (24) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை அண்ணாதுரை என்பவரிடம் கோழி கறி வாங்க சென்றுள்ளார். அப்பொழுது கறி வாங்கிவிட்டு ரூ.600 அவரிடம் கொடுத்துள்ளார், இந்த நோட்டு சற்று வித்தியாசமாக இருப்பதால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே தப்பி செல்ல நினைத்த அந்த உபாஸ் அலியை அங்கிருந்த மக்கள் விரட்டி பிடித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், மேட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார், காவல் ஆய்வாளர் சுப்பிரமணி உபாஸ் அலியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அவர் வேலை பார்த்த ஃபேன்சி ஸ்டோரில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒரு ரகசிய அரை இருந்ததை கண்டுபிடித்தனர், அங்கு பிரிண்டர் மெஷின், செல்போன் மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 இருந்ததை கைப்பற்றினர்.
பின்னர் விசாரணையில், "கடையின் உரிமையாளர் காஜா மைதீனுக்கு ரூ.20 லட்சம் கடன் இருப்பதால், அவரது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஹீம் கடனை அடைப்பதற்காகவும், வேலைக்காகவும் அழைத்து வந்தார்.
அதன் பிறகு ஃபேன்சி ஸ்டோர் கடையில் தனி அறை அமைத்து தயாரித்த கள்ள நோட்டை, வேறு கடைக்கு சென்று மாற்றி வர அறிவுறுத்தினார். அதன் பெயரில் தான் கறிக்கடைக்குச் சென்று பணத்தை மாற்றும் போது சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இவர்கள் 3 போரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.