தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழ் மோசடி : வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்
தமிழ் நாட்டில் மத்திய அரசு நிறுவனங்களில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடு தேர்வுத்துறையின் சான்றிதழ் சர்பார்ப்பில் சிக்கியுள்ளனர்.
அஞ்சல் ஊழியர்,சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் நிறுவனங்களில் 200-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ்நாடு பணியிடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் சேர்ந்துள்ளனர். தபால் துறை சார்பில், தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 1,500-க்கும் மேற்பட்டவர்கள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அளித்த சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதில், தமிழ்நாடு பணிக்குத் தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, 10 -ம் வகுப்பு சான்றிதழ்களில், அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
மேலும், சான்றிதழ்களில் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அந்த சான்றிதழில், முதல் மொழி பாடமாக ஹிந்தி இடம் பெற்றுள்ளதும், த்தாம் வகுப்பு சான்றிதழில் சம்பந்தப்பட்ட மாணவர் ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் மாணவர்கள் படித்த பள்ளிகள் குறித்த விவரத்தில், 'சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல்' என, கற்பனையான பெயர்கள், சான்றிதழில் இடம் பெற்றுள்ளன.
இதனையடுத்து, இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி பள்ளிக் கல்வித் துறையிடம் உரிய அறிக்கை தருமாறு தபால் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசாரணையில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்துள்ளதை அரசு தேர்வு துறை கண்டுபிடித்துள்ளது.
இதனையடுத்து, போலி சான்றிதழ் கொடுத்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அரசு தேர்வுகள் துறை பரிந்துரை செய்துள்ளது.