ஐபிஎல் 2022: பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாப் டூப்ளசிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஐபிஎல் 2022-ம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வாரத்தில் தொடங்க உள்ளது.
மார்ச் 26-ம் தேதி தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.
இதனிடையே பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டன் யார், என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கேப்டன் பதவிக்கான போட்டியில் ஃபாப் டூப்ளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் மேக்ஸ்வெல் முதல் சில போட்டிகளில் இருக்க மாட்டார் என்பதாலும், தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை வழிநடத்தியபோது பெரிதாக பேசபடவில்லை என்பதாலும் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் மார்ச் 12-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தது.
இதுகுறித்த அறிவிப்பை இன்று மதியம் 3.45 மணிக்கு வெளியாகும் என்பதை எதிர்நோக்கி பெங்களூருவில் உள்ள மியூசியம் சாலையில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது, அனைவரும் கோலிதான் கேப்டன் என நினைத்து உற்சாக குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. பெங்களூரு மியூசியம் சாலையில் நடத்தப்பட்ட கோலாகல விழாவில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக பாஃப் டூப்ளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலியை போன்றே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள டூப்ளசிஸ் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தோனிக்கே பல சமயங்களில் டூப்ளசிஸ் ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.
இப்படி சிறந்த அனுபவத்தை வைத்துள்ள டூப்ளசிஸ் ஆர்சிபிக்கு கோப்பையை வென்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.