இந்தியாவை கட்டி எழுப்பிய இரும்பு மனிதர் வல்லபாய் படேல் - செயலாற்றல் ஒரு சிறு பார்வை!
அதிகமான ராஜ்ஜியங்களாகச் சிதறிக் கிடந்த இந்தியாவை கட்டியெழுப்பிய பெருமைக்கு உரியவர்தான் வல்லபாய் படேல்.
வல்லபாய் படேல் - பிறப்பு
வல்லபாய் படேல், குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் ஊரில், ஜாவர்பாய் படேல் - லட்பாய் தம்பதியினருக்கு 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் மூன்றாவது மகனாகப் பிறந்தார். படேலுக்கு, சோமாபாய், நர்சிபாய், விதால்பாய் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்களாவர்.
படேல் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது 16-வது வயதில் ஜாவெர்பென் படேல் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு மனிபன் படேல் என்ற பெண் குழந்தையும், தாயாபாய் படேல் என்ற ஆண் குழந்தையும் பிறந்தனர்.
வழக்கறிஞர்
படேல் தனது இளம் வயது முதலே வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தார். தனது 22-ம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, 25-ம் வயதில் டிஸ்ட்ரிக்ட் பிளீடர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1900-ம் ஆண்டு கோத்ராவில் அலுவலகம் தொடங்கி வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த படேலின் மனைவி ஜாவெர்பென் படேல் 1908-ம் ஆண்டு காலமானார். தன் மனைவி மீது அதீத அன்பு கொண்டிருந்தஹால் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. பட்டம் படிக்க 1910-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர், படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார்.
காந்தியுடன் நட்பு
லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய படேல், அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், அங்குள்ள மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடினார். அது சுதேசி இயக்கம் உச்சத்திலிருந்த காலகட்டம். ஒருமுறை மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட படேல், குஜராத் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து வெளியேறினார்.
வெள்ளாடை உடுத்திக்கொண்டு தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அதன்பிறகு, பல்வேறு மக்கள் போராட்டங்களுக்காக அடிக்கடி சிறைக்குச் சென்று வந்தார். காந்தி நடத்தும் போராட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வார். இரண்டாம் வட்ட மேசை மாநாடு தோல்வியைத் தழுவியது.
துணைப் பிரதமர்
காந்தி, படேல் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது எரவாடா மத்தியச் சிறையிலிருந்த சமயத்தில்தான், படேல் காந்தியுடன் மிகவும் நெருக்கமானார். படேலின் திறமையையும், செயலாற்றலையும் பாராட்டும் விதமாக `சர்தார்' என்ற பட்டத்தை படேலுக்கு வழங்கியவர் காந்திதான்.
படேல் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். இதன் மூலம், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் படேல்.
அகண்ட பாரதம்
அதுமட்டுமின்றி, முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் நாடு முழுவதும் ஒரு பெரும் பிரச்னை நிலவியது. இந்தியாவில் உள்ள சமஸ்தானங்கள் சிதறிக் கிடந்தன. அந்தந்த ராஜ்யத்தின் அரசர்கள், தங்களின் நாடு தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கினார்கள்.
அந்தப் பொறுப்பு படேலிடமே கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார், பலரைச் சந்தித்தார், பல கட்ட முயற்சிகளைச் செய்தார், பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதைச் செய்தும் முடித்தார். ஆனால், திருவாங்கூர் சமஸ்தானம், ஜோத்பூர், போபால், ஹைதராபாத் மற்றும் ஜூனாகத் ஆகியவை இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டன.
இந்தியாவின் சிப்பாய்
பேச்சுவார்த்தைகள், ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் மூலமாக பின்னர் இவை இந்தியாவோடு இணைந்தன. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாகாணங்களுள் ஒன்றாக இருந்த ஹைதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் இணைக்க ப்டேல் அரும்பாடு பட்டார். இதனால் “இரும்பு மனிதர்ˮ என அழைக்கப்பட்டார்.
தற்போது உள்ள மாநிலம் சார்ந்த இந்தியாவை உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களையே சாரும். 1947ல் இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான போரின்போது ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் செயல்பட்டார். இதனால், சுதந்திர இந்தியாவின் சிப்பாய் என அழைக்கப்படுகின்றார்.
ஆர்.எஸ்.எஸ்
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1949ஆம் ஆண்டு வரை அமைச்சராகப் பணியாற்றினார். அரசியலமைப்பை வரையும் குழுவின் தலைவராக பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரை நியமிக்கும் முடிவை எடுத்ததும் இவரே. ஐ.ஏ.எஸ்⸴ ஐ.பி.எஸ் போன்ற அரசு ஊழியர்கள் அமைப்பை உருவாக்கிட இவரது பங்களிப்பு அளப்பரியதாகும்.
அகில இந்திய “குடிமைப் பணிகளின் தந்தைˮ எனவும் இந்திய குடிமைப் பணியாளர்களுக்கான “புனித புரவலர்ˮ என்றும் அழைக்கப்படுகின்றார். சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்ஸை நிரந்தரமாக 'கட்டுப்படுத்த' தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரும்பினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார்.
இறப்பு
இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம் என்பது அந்த நிபந்தனைகளில் சில. படேல் 1950-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள பிர்லா இல்லத்தில் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 75. பட்டேலின் மறைவையடுத்து நாடுமுழுவதும் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்பட்டது. சிவில் சர்விஸ் பணிகளை (IAS,IPS,IFS) உருவாக்கியதில் படேலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. படேலுக்கு 1991-ம் ஆண்டு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கெளரவம்
கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசால், படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி ``தேசிய ஒற்றுமை தினமாகக்" கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, படேலின் 143-வது பிறந்த தினம்.
அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை அருகே, 3,000 கோடி ரூபாய் செலவில், படேலின் 597 அடி உயரச் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்று அழைக்கப்படுகிறது.
படேல் ஆற்றிய பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் பேசப்பட்டுக்கொண்டே தான் இருக்கும் என்பதில் மாற்றமில்லை.