பொருளாதார நிபுணர் பிரதமர் ஆன வரலாறு : மன்மோகன் சிங்கும் இந்தியாவின் வளர்ச்சியும்
மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதி அல்ல. பொருளாதார நிபுணர். அவரை அரசியலுக்கு அழைத்து வந்த பெருமை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவையே சேரும்.
ஏறக்குறைய அரசியலிலிருந்து விலக நினைத்த நரசிம்மராவ்வின் வாழ்க்கையை மீண்டும் அரசியலின் பக்கம் திருப்பியது ராஜீவ்காந்தியின் படுகொலைதான்
நிதியமைச்சர்
அந்தப் படுகொலைக்குப் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கட்சி சார்ப்பாக நரசிம்மராவ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அப்போதைய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா, இந்தியாவின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி, எட்டு பக்க அறிக்கையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கை தொடர்பாக தன்னுடைய நெருங்கிய ஆலோசகர் பி.சி. அலெக்சாண்டரிடம் நரசிம்மராவ் விவாதித்தபோது சர்வதேச நிலையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒருவரை நீங்கள் நிதி அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கமுடியுமா? எனக் கேட்டிருக்கிறார். அவர் பரிந்துரை செய்த பெயர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவரும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் இயக்குநராகவும் இருந்த ஐ.ஜி.படேலின் பெயர்.
ஆனால், ஐ.ஜி.படேல் அதை ஏற்க மறுக்கவே அடுத்த இடத்தில் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்தான் மன்மோகன் சிங். உங்களை எனது நிதி அமைச்சராக்க விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.
நாம் வெற்றிகரமாக இருந்தால், நம் இருவருக்கும் அதற்கான நற்பெயர் கிடைக்கும். ஆனால் நாம் தோல்வியடைந்தால், நீங்கள் விலக வேண்டியிருக்கும் எனக் கூறி மன்மோகன் சிங்கை நிதியமைச்சர் ஆக்கினார் நரசிம்மராவ்.
ஒதுக்கப்பட்ட பட்ஜெட்
1991-ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் மன்மோகன் சிங் அதை எடுத்துக் கொண்டு நரசிம்மராவ்விடம் சென்றபோது, அதை அவர் நிராகரித்ததோடு, இதுபோன்ற ஒன்றுதான் எனக்குத் தேவை என்றால் நான் ஏன் உங்களைத் தேர்வு செய்திருக்கப்போகிறேன் எனக் கடுமையாகவும் பேசி அனுப்பியிருக்கிறார்.
ஆனால், அந்தப் பட்ஜெட்தான் நவீன இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது. மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் 8-9% பொருளாதார வளர்ச்சி விகித்தை அடைந்தது.
2007 இல், இந்தியா அதன் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதமான 9% ஐ அடைந்தது. உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது. வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் நெடுஞ்சாலை நவீனமயமாக்கல் திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்தது.
வங்கி மற்றும் நிதித் துறைகளில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த அவர், கடனால் சிக்கி தவித்த விவசாயிகளை அதிலிருந்து விடுவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
மன்மோகன் சிங்கின் சாதனைகள்
தொழில்துறை சார்ந்த பல்வேறு கொள்கைகளை வகுத்தார். 2005 இல், அவரின் அரசு சிக்கலான விற்பனை வரிக்குப் பதிலாக VAT வரியை அறிமுகப்படுத்தியது. பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பு வகித்தபோது, சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005, 23 ஜூன் 2005 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) விதிகள் 2006 உடன் 10 பிப்ரவரி 2006 அன்று நடைமுறைக்கு வந்தது.
இந்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 2005 இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். NREGA, கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள், ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் வருமான பாதுகாப்பை உறுதி செய்தது. பின்னர் ஏப்ரல் 2008 இல், இந்தத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என பெயர் மாற்றப்பட்டது.
சாதனை சிற்பி
மன்மோகன் சிங்கின் அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது சிவில் மற்றும் ராணுவ அணுசக்தி நிலையங்களை பிரிக்க ஒப்புக்கொண்டது.
அனைத்து சிவில் அணுசக்தி வசதிகளும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜூலை 18, 2005 அன்று கையெழுத்தானது. கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும், இந்திய - அமெரிக்க உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க விதித்த தடைகளை முடிவுக்கு கொண்டு வந்தார் மன்மோகன் சிங்.
இதனால், அவரின் ஆட்சியே கவிழும் நிலைக்கு சென்றது, இருப்பினும் உறுதியாக இருந்த சிங், அனைத்து தடைகளை தாண்டி நினைத்ததை செய்து காண்பித்தார். பொருளாதாரம் குறித்துத் தொடர்ந்து இயங்கி வரும் மன்மோகன் சிங், மத்திய பா.ஜ.க அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதை `இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பேரழிவு என விமர்சனம் செய்தார்.
இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதெல்லாம் அதற்குரிய ஆலோசனைகளையும் தரத் தவறவில்லை. மத்திய அரசின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த சமயத்தில், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த பாதையில் இந்தியாவால் இனியும் தொடர முடியாது. எனவே, அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் கொரோனா காலங்களில் `மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்குச் செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும். அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும். நிறுவனத் தன்னாட்சி, செயல்முறைகள் மூலம் நிதித் துறைக்குப் பொறுப்பு அளிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாகக் கூறுகிறேன் என அரசியலையும் தாண்டி பொருளாதார நிபுணராக அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பொருளாதாரம் மட்டுமல்லாது அண்டை நாடுகளுடனான பிரச்னைகள் தொடர்பாகவும் பா.ஜ.க அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தான் சார்ந்த அரசியல் தாண்டி தன்னை ஒரு பொருளாதார மாணவராக எப்போதும் உணரும் மன்மோகன் இப்போதும் ஏதாவது ஒரு மூளையில் நாட்டின் பொருளாதாரம் குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருப்பார்