நேற்று ஒரு நாள் செயலிகள் முடக்கம் - மார்க்கிற்கு இவ்வளவு கோடி இழப்பா?
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் நேற்றிரவு செயலிழந்தன. அதன் பின்னர் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு மீண்டும் அவை செய்லபட தொடங்கின. இதனால் Facebook நிறுவனர் மற்றும் CEO ஆக மார்க் சக்கர்பெர்க் 7 பில்லியன் டாலர்களை (இந்திய மத்தியில் 52 ஆயிரம் கோடி) இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று செயலிகளையும் பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென 9 மணியளவில் இந்த மூன்று செயலிகளும் செயலிழந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த பயனர்கள் காரணம் தெரியாமல் மொபைல் நெட்ஒர்க்கை சரி செய்து பார்த்தனர். ஆனால் உலகம் முழுவதுமே இந்த செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை இந்த செயலிகள் மீண்டும் செய்லபட தொடங்கின. கடைசியாக 2019ம் ஆண்டு பேஸ்புக் செயலி செயலிழந்தது.
இது சுமார் ஒரு மணிநேரத்தில் சரி செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற செயலிழப்பு பல மணிநேரங்கள் நீடித்ததால் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளார்.

இதனால் அவரின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 52 ஆயிரம் கோடி) சரிந்துள்ளது. 140 பில்லியன் டாலருடன் உலக பணக்காரர்களில் 4வது இடத்தில் இருந்த மார்க் சக்கர்பெர்க் இந்த சரிவால் 5வது இடத்திற்கு சென்றார்.
பில்கேட்ஸ் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலி மீதான நம்பகத்தன்மை, சர்வதேச செய்தி நிறுவனங்களின் ஆய்வு கட்டுரைகள் என பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், இது அந்நிறுவனத்திற்கு மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.