சமைத்த உணவில் தென்பட்ட எலியின் கண்கள்...அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ; நடந்தது என்ன?
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜூவான் ஜோஸ் என்பவர் அங்குள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து உறைந்த காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை வாங்கியுள்ளார்.
வாங்கி வந்த உணவுப் பொருட்களை சமைத்து முடித்த அந்த இளைஞர் அதை ஒரு தட்டில் போட்டு சாப்பிடத் தொடங்கியிருக்கிறார்.
அப்போது, தட்டில் ஏதோ கருப்பாக இருந்த பொருளை ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்ட போது அது மிகவும் வித்தியாசமாகவும், மொறுமொறுப்பாகவும் இருப்பதை உணர்ந்துள்ளார்.
அதே நேரத்தில், அது முள் முட்டைக்கோஸ் என அவர் கருதியிருக்கிறார்.
ஆனால், தனது தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை கவனித்த ஜூவான் ஜோஸ் திடுக்கிட்டுள்ளார்.
உணவுப் பொருளில் ஏதோ ஒரு உயிரினம் இறந்து கிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் அதைக் காட்டியபோது, அவருடைய தட்டில் இருந்தது செத்துப்போன எலி என்பது அவருக்கு தெரியவந்தது.
சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஜூவான் ஜோஸ் காய்கறிகளை வாங்கி வந்த போது அதில் இருந்த எலியை அவர் கவனிக்கவில்லை.
இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் மீது ஜூவான் ஜோஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் சப்ளையரை தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும், அவர்கள் பொதுவாக தீவிர சோதனைகளை செய்பவர்கள் எனவும்,
இனி அனைத்து நிலைகளிலும் பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்வதாக கூறியதாகவும் சூப்பர் மார்க்கெட் தரப்பு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.