ரூ.215கோடி பணம் பறித்த வழக்கு - குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகை ஜாக்குலின்!
தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
பண மோசடி
பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரை ஏமாற்றி பண மோசடி செய்த்தாக இவர் மீது ஏற்கனவே புகார்கள் உள்ளன. டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக,
அவர் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
அதன் அடிப்படியில், அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம் மற்றும் 82.5 லட்சம் ரொக்கம், 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சிறையில் இருந்தவாறே அவர் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை ஏமாற்றி 200 கோடி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சுகேஷ் சந்திரசேகரின் காதலி லீனா மரியா மற்றும் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
பின்னர் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தொழிலதிபரை மிரட்டி 215 கோடி பணம் பறித்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டது.
அத்துடன் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.