சண்டை போட இது நேரமில்லை...ஏதாவது செய்யணும் : சட்டசபையில் கொந்தளித்த துரைமுருகன்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் அவர் காவிரி பிரச்சனை வேதனையுடன் தனது கருத்தினைப் பதிவு செய்தார்.
அப்போது காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒரே அணியாக இருப்பதுபோல் தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக இருக்க வேண்டும். நாம் இப்போது சண்டை போட கூடாது. நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று சண்டை போட இது நேரம் இல்லை. கர்நாடக அரசு தொடர்ந்து விதிகளை மீறி வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்து வரவேண்டிய நீரை தடுக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தந்தை வழியில் இருந்து நேர்மையாக செயல்படுவார் என்று நம்புகிறேன். நாம் அருகருகே இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என துரைமுருகன் கூறினார். இந்த பிரச்சனை மகன், பேரன், கொள்ளுப்பேரன் என போகுமோ என்று பார்க்கிறேன்.
உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா அணைகட்ட முயற்சிக்கிறது.ஒரு மாநில அரசு உச்சநீதிமன்றம் சொன்னதைக் கூட கேட்க மறுப்பது கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது என கொந்தளித்த துரைமுருகன் தமிழகம் தண்ணீருக்கு கையேந்தும் நிலையில் உள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.
பின் தீர்மானத்தை நிறைவேற்ற அதனை அனைத்துக் கட்சியினரும் ஆமோதித்தனர். இதனால் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.