வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை: தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் தமிழகத்தில் கொரோனா பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் தற்போது உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.