மேற்கு வங்கத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ; பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

accident rajasthan 6 dead west bengal express train
By Swetha Subash Jan 14, 2022 06:09 AM GMT
Swetha Subash

Swetha Subash

in விபத்து
Report

ராஜஸ்தானில் இருந்து அசாமுக்குச் சென்ற ரயில், மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிக்கானெரில் இருந்து அசாமின் கவுகாத்தி நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்குவங்கத்தின் தோமோஹானி அருகே சென்றபோது நேற்று மாலை திடீரென ரயில் தடம் புரண்டது.

விபத்தின்போது ஆயிரத்து 53 பயணிகள் ரயிலில் இருந்தனர். தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் விலகியதால், பயணிகள் இடுபாடுகளில் சிக்கினர்.

தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர் , ரயில் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 4 பயணிகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பலனிற்றி இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முதலமைச்சர்கள் உடனான கொரோனா தொடர்பாக ஆலோசனையின்போது, ரயில் விபத்து குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கிக் கூறினார்.

இதேபோல், விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் ரயில் விபத்து தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.