'மொத்தம் ரூ.75 லட்சம் பில்” - பாறை இடுக்கில் சிக்கிய வாலிபருக்கு ஆன செலவு
கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்கும் பணிக்கு கேரள அரசு சுமார் ரூ. 75 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற இளைஞர் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது கால் தவறி கீழே விழுந்த அவர் செங்குத்தான பாறையொன்றின் இடையே சிக்கிக்கொண்டார்.
அங்கிருந்தபடி தன்னை மீட்கும்படி வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்ப போலீசார், தீயணைப்பு வீரர்கள், கேரள மாநில பேரிடர் மீட்பு துறை, கடலோர பாதுகாப்பு படை, விமானப்படை மற்றும் ராணுவத்தின் மீட்பு குழு ஆகியோர் உதவியுடன் பாபுவை மிகுந்த சிரமப்பட்டு மீட்டனர்.
7 ஆம் தேதி மாலையில் பாறை இடுக்கில் மாட்டிக்கொண்ட பாபு 45 மணி நேரத்திற்கு பிறகு பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பாபுவை மீட்கும் பணிக்கு கேரள அரசு சுமார் ரூ. 75 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிக்கி இருக்கும் பகுதியை கண்டுபிடிக்க டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதோடு கடற்படையின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. அதன்பின் அந்த தகவல் ராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் தனி ஹெலிகாப்டரில் வந்தனர்.
ராணுவ வீரர்கள் பாபு இருக்கும் இடத்தின் அருகே ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து கயிறு கட்டி பாறை இடுக்குக்கு சென்று அவரை அழைத்து வந்தனர். ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேர வாடகை மட்டும் ரூ.2 லட்சம் ஆகும் என்பதால் 45 மணி நேர மீட்பு பணிக்கு செலவுத் தொகை ரூ.75 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது.