தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை? - எதிர்பார்ப்பில் மாணவர்கள்
தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அதே மாதத்தில் மீண்டும் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பரவிய கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்ததை தொடந்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் டிசம்பரில் மீண்டும் ஒமைக்ரான் தொற்று பரவியதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே மீண்டும் தொற்று குறைந்ததால் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் 100% பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில் அமைக்கப்படுவதாலும், ஆசிரியர்கள் இதன் பணிகளில் ஈடுபடுவதாலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.