ஜெயலலிதா வீட்டு வேலையை கவனிக்க வந்தவர் சசிகலா - தலைவி படம் குறித்து ஜெயக்குமார் பேச்சு
நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள தலைவி படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான ‘தலைவி’ திரைப்படம் இன்று தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்த படத்தை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில் பார்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைவி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், வரலாற்றை திரித்துக் கூறுவது ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளார்.
திமுகவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் என்றும், படத்தில் அமைச்சர் பதவி கேட்டு திமுகவை விட்டு பிரிந்ததாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் எம்ஜிஆரை ஜெயலலிதா அவமதிப்பது போலிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கும் அரசியலக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதை படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.