நெல்லையில் பரபரப்பு : அபராதம் விதித்த பெண் எஸ்.ஐ-க்கு கத்தி குத்து
நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை மர்ம நவர் ஒருவர் கத்தியால் குத்தி சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் கிரேசி. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழுவூரில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆறுமுகம் என்பவர் திடீரென ஆய்வாளர் மார்க்ரெட் கிரேசியை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் ஆய்வாளர் மார்கரெட் கிரேஸியின் கன்னம், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சக காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் , உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேசி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது குடித்துவிட்டு பைக்கில் வந்ததாகவும், அதனால் அவருக்கு அபராதம் விதித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவர், ஆய்வாளர் நேற்று பணியில் இருந்த போது கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
நெல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.