விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பு: அபராதம் விதித்த அதிகாரிகள்
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பழனியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காரமடை தோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவல் அப்பகுதியில் பரவியது.
தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் விஜய்சேதுபதியை பார்ப்பதற்கு மண்டபம் முன்பு குவிந்தார்கள். இதனால் காலை முதலே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படப்பிடிப்பில் பணிபுரியும் நடிகர் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை, முகக்கவசம் அணியவில்லை எனவும் சுகாதாரத்துறைக்கு தகவல் சென்றது.
உடனே சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, படப்பிடிப்புத் தளத்தில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. உடனே, ரூ.1500ஐ அபராதமாக விதித்தார்.

கடந்த மாதம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.