சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியர் - 30 ஆண்டுகளுக்கு பின் கொலை செய்த மாணவர்
பெல்ஜியத்தில் சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகளுக்கு பின் மாணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 59 வயதான மரியா வெர்லிண்டன் என்ற ஆசிரியர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த போலீசாருக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் பெரும் புதிராகவே இருந்து வந்தது.
ஆனாலும் தொடர்ந்து நடந்த விசாரணையில் கடந்த வாரம் 37 வயதான குட்னர் உவென்ட்ஸ் என்பவர் பெல்ஜியம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான உண்மை ஒன்று வெளியானது.
கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மரியா வெர்லிண்டனின் வகுப்பில் தான் ஏழு வயது சிறுவனாக பயின்று வந்த இவர், அப்போது தன்னை பற்றி ஆசிரியர் மரியா வெர்லிண்டனின் ஒருபோதும் நல்ல கருத்துகளைக் கூறவில்லை என்றும் அதில் இருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு வெர்லிண்டனின் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டின் அருகே இருந்த உணவகத்தில் சுமார் 101 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொள்ளையின் போது ஏற்பட்ட மோதலில் வெர்லிண்டன் கொல்லப்பட்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் அவரது பர்ஸில் இருந்து ஒரு ரூபாய் கூட திருடப்படவில்லை என்பதால் வேறு கோணங்களில் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையில், வெர்லிண்டனை கொலை செய்தது தொடர்பாக குட்னர் உவென்ட்ஸ் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையிலேயே குட்னர் உவென்ட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து உவென்ட்ஸிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று அதைக் குற்றம் நடந்த இடத்தில் இருந்த டிஎன்ஏ மாதிரிகளுடன் போலீசார் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.