தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை 101 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற முன்னாள் மாணவர்
7 வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை வாலிபர் ஒருவர் 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்து வந்த 57 வயதான மரியா வெர்லிண்டன் என்ற ஆசிரியை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் மர்மமான முறையில் தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
பிரேத பரிசோதனை நடத்தியதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்திய காயங்கள் இருப்பதாக தெரியவந்தது.
மேலும், ஆசிரியையை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து நூற்றுக்கணக்கான டி.என்.ஏ. மாதிரிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணையை பல்வேறு கோணங்களில் நடத்தி வந்தனர்.
எனினும் கொலையாளி யார் என்பதை கண்டுப்பிடிக்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடினர்.
இந்நிலையில் இந்த கொலை நடந்து சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தற்போது துப்பு துலங்கி இருக்கிறது.
அதன்படி ஆசிரியை மரியாவை 37 வயதான அவரது முன்னாள் மாணவர் ஒருவர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கன்டர் உவென்ட்ஸ் என்ற அந்த வாலிபர் தனது 7 வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியையாக மரியா வெர்லிண்டன் இருந்துள்ளார்.
அப்போது கன்டர் உவென்ட்ஸை ஆசிரியை மரியா கடுமையான கருத்துக்களால் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை வன்மத்துடன் கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனை அவரே தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணையில் கன்டர் உவென்ட்ஸ் தனது டி.என்.ஏ. மாதிரியை போலீசாரிடம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.